;
Athirady Tamil News

இந்தியா-பிரான்ஸ் உறவின் வலுவான தூண் பாதுகாப்பு ஒத்துழைப்பு.. பிரதமர் மோடி!!

0

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பாரிசில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் இரு தரப்பு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசும்போது, இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்புகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:- இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் முக்கிய தூண்களில் ஒன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகும். பாதுகாப்பு உறவுகள் எப்போதும் நமது உறவுகளின் அடித்தளமாக இருக்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையின் சின்னமாகும்.

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் ஆகியவற்றில் பிரான்ஸ் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களாக இருந்தாலும் சரி, இந்திய கடற்படைக் கப்பல்களாக இருந்தாலும் சரி, நாம் இணைந்து நமது தேவைகளை மட்டுமல்ல, மற்ற நட்பு நாடுகளின் தேவைகளையும் நிறைவேற்ற விரும்புகிறோம். இரு நாடுகளின் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம். முந்தைய 25 ஆண்டுகளின் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குகிறோம்.

நம்மை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதி எடுத்துள்ளனர். இந்தப் பயணத்தில் பிரான்சை இயற்கையான கூட்டாளியாக பார்க்கிறோம். பிரான்சின் தேசிய தினம் உலகிற்கு ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ ஆகியவற்றின் அடையாளமாகும். இந்தியாவில் தேசிய அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் பிரான்ஸ் அரசு பங்குதாரராக இணைகிறது. இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்சில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம். இவ்வாறு மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.