ஜிப்மர் நர்ஸ் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி-போலீஸ்காரருக்கு வலை!!
புதுவை கோரிமேடு ஆனந்தாநகரில் வசிப்பவர் தீபக்தாமஸ்(37). இவர் அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே ஓட்டல் வைத்துள்ளார். இவரின் மனைவி அனுமோல்(34) கேரளாவை சேர்ந்தவர். இவர் ஜிப்மரில் நர்சாக பணியாற்றி வருகிறார். தீபக்தாமசின் தொழில் நண்பரான சுகேசிடம் சொந்தமாக வீட்டு மனை வாங்க வேண்டும் என தெரிவித்தார். சுகேஷ் தம்பி புதுவை ஐ.ஆர்.பி.என் காவல்துறையில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சனில்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். 2021 அக்டோபரில் கோரிமேடு காமராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டு மனையை அனுமோல் குடும்பத்துக்கு சுகேஷ், சனில்குமார் காண்பித்தனர்.
இதற்கு ரூ.10.82 லட்சம் ஆன்லைன் மூலம் அனுமோல் அளித்தார். பி.பி.ஏ. அப்ரூவர் பிரச்சினை உள்ளதாக கூறி மனையை கிரயம் செய்த கொடுக்காமல் தம்பதியை அண்ணன், தம்பி இருவரும் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பித்தரவில்லை. சனில்குமார் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது ஜிப்மரில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர், ஊழியர்கள் பலரிடம் இதேபோல அவர் மோசடி செய்து சுமார் ரூ.40லட்சம் சுருட்டியது தெரிய வந்தது. அதிர்ச்சிடைந்த அனுமோல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காவலர் சனில்குமார், அவரின் அண்ணன் சுகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.