சந்திரயான்-3 திட்டத்தில் புதுமைகளை புகுத்திய விஞ்ஞானிகள்!!
நிலவுக்கு ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் புதுமைகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கலன் தொடர்பை இழந்தது. இந்த முறை லேண்டர் கலன்களின் கால்களை மிக திடமாக வடிவமைத்ததுடன் அதனை பல்வேறு பரிசோதனைகள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். லேண்டர் கலன் தரையிறங்கும்போது சம தளத்தில் இறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இம்முறை லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைக்கும் வகையில் புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லேண்டர் கலன் தரையிறங்கும் வேகத்தை கணக்கிடுவதற்கான லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டதைவிட வேகமாக தரையில் இறங்குகிறது என்பதை அறியலாம். கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அவற்றில் ஒரு என்ஜின் புழுதிகளை தணிப்பதற்காக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில எதிர் விளைவுகள் ஏற்படலாம் என கருதி தற்போது அந்த என்ஜின் நீக்கப்பட்டு நான்கு என்ஜின்களுடனேயே லேண்டர் செல்கிறது. லேண்டர் கலனில் உள்ள 7 வகை சென்சார்கள், கேமரா நுட்பங்கள் மூலம் மென்மையான தரையிறக்கத்துக்காக வழி காட்டுதல்கள் தரப்பட்டுள்ள என்ஜின்களின் வேகக் கட்டுப்பாட்டு விதத்திலும் சில நுட்பமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இறுதி நிலை தரையிறக்க வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.