கர்நாடகாவில் ஒரு மாவீரன்: சிறுத்தை கால்களை கட்டி கெத்தாக டூவீலரில் சென்ற இளைஞர்!!
டூவீலரில் மனிதர்களையும் மளிகை சாமான்களையும் ஏற்றி செல்வதை போல முதன்முறையாக, கர்நாடகாவில் ஒரு நபர் சிறுத்தையை அவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டிக்கொண்டு வண்டியை ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பகிவாலு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் தனது பண்ணையில் அந்த சிறுத்தையை கண்டிருக்கிறார். தற்காப்புக்காக சிறுத்தையை எப்படியோ பிடித்த முத்து, அதனை தனது வாகனத்தின் பின்புறத்தில் வைத்து கயிறு மூலம் கால்களை கட்டி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். அந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஏற்பட்ட மோதலில் முத்துவின் கையில் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. “சிறுத்தையை பிடித்து கொண்டு வர முத்து கையாண்ட முறை சற்று மோசமானது என்றாலும் கூட அது அவருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது.
சிறுத்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதை தவிர, அதனை துன்புறுத்தும் வகையில் முத்துவிற்கு வேறு எந்த தவறான உள்நோக்கமும் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. சிறுத்தை பலவீனமாக இருக்கிறது. ஆனால் பெரும் பாதிப்பில்லை” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வை பெற முத்து ஒரு ஆலோசனை அமர்வுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுத்தை தற்போது அங்கு கண்காணிப்பில் உள்ளது. சினிமாவில் சிறுத்தைகளை பிடிக்கும் நிழல் மாவீரனாக நடிகர்கள் தோன்றும் நிலையில், முத்துவின் வீரச்செயலால் அவரை “நிஜ மாவீரன்” என குறிப்பிடுகின்றனர்.