அவர்களுடைய எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும் கூட…! மியா குறித்த அசாம் முதல்வர் கருத்துக்கு ஒவைசி பதில்!!
தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சமடைந்தனர். மழை காரணமாக காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து புலம்பெயர்ந்து அசாமில் குடியேறிய முஸ்லிம்கள் மியா என்று உள்ளூரில் மொழியில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ”காய்கறிகளை இவ்வளவு விலைக்கு உயர்த்தியது யார்? காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் மியா வியாபாரிகள். அசாம் மாநில மக்கள் காய்கறிகள் விற்பனை செய்திருந்தால், அவர்கள் விலைவாசியை உயர்த்தியிருக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அடிக்க மியா சமூகத்தினரை வகுப்புவாத அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள், அசாம் மக்களுடைய கலாசாரம், மொழியை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஹிமாந்தா பிஸ்மா சர்மாவின் மியா குறித்த கருத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பதவிட்டுள்ள டுவிட்டரில் ”அசாமில் சில குரூப்புகள் உள்ளன.
அவர்களின் வீட்டு எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும், கோழி முட்டையிட வில்லை என்றாலும், மியா (முஸ்லிம்கள்) மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட தோல்விகளால் இதுபோன்று குற்றம் சாட்டலாம்” என்றார். வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருக்கும் என பா.ஜனதாவினர் கூறி வரும் நிலையில், தற்போதைய நிலையில் அவர்களிடம் தக்காளி, கீரை, உருளைக்கிழக்கு உள்ளிட்டவைகள் கேட்டு நிர்வகிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் நாட்டிற்கு மோடி பயணம் செய்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.