வரி ஏய்ப்பு புகாரில் சோதனை- ஜி.எஸ்.டி. அதிகாரிகளை கடைக்குள் வைத்து அடைத்த வியாபாரிகள்!!
கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோழிக்கோடு மாவட்டம் திருவண்ணூர் எஸ்.எம். தெருவில் உள்ள 25 கடைகள் மற்றும் அரையிடத்துப்பாலம் பகுதியில் உள்ள மால் உள்ளிட்டவைகளில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்த கடைகளில் இருந்த வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களின் சோதனையை தொடர்ந்தனர். இதில் ஆவேசம் அடைந்த வியாபாரிகள், சோதனையில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சிலரை கடைக்குள் வைத்து அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து கடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டனர்.