யாழில். குளோபல் பெயார் – 2023.!! (PHOTOS)
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான “குளோபல் பெயார்-2023” இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
குறித்த சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளன.
ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பை குளோபல் பெயார் வழங்குகிறது.
ஊழியர் சேமலாப நிதி , ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பான விடயங்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தூதரகத் துறையின் சேவைகள் முதலானவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் குளோபல் ஃபேர்-2023 யில் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தொழில் திணைக்கம் ஆகியவற்றின் சேவைகளை பொதுமக்களின் காலடிக்கு கொண்டுவருதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி மற்றும் சமூக சேவை வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் குளோபல் பெயாரில் இதற்காக இணைந்துள்ளன. முதலாளிகளின் அறக்கட்டளை நிதியச் சபை தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய தொழில் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அதிகார சபை சமூக சேவைகள் திணைக்களம் போன்றவற்றின் அனைத்து நிறுவனங்களின் வேவைகளும் இங்கு இடம்பெறவுள்ளன.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். பயிற்சி பெற்றும் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தொழில் பயிற்சி அதிகார சபை மூலம் சான்றிதழ் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பில் தேவையான சேவைகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொழிலாளர் தொடர்பான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி இங்கு இடம்பெறவுள்ளது.
அதேவேளை குறித்த சேவை இடம்பெறும் இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் இரவு நேரத்தில் பொழுது போக்கு இசைக் கச்சேரிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்