குருந்தூர் மலை விவகாரம் இன, மதவாதத்தின் உச்சகட்டம் – பௌத்த பிக்குகள், பொலிஸாரின் அத்துமீறல் குறித்து தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் கடும் கண்டனம்!!
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் வழிபடுவதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இதன் மூலம் தமிழ் மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டிருப்பதாகச் சாடியுள்ளனர்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதன் பிரகாரம் அங்கு சென்ற தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு முற்பட்ட வேளையில், அங்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்குகளும் அவர்களுடன் வருகை தந்திருந்தவர்களும் அதற்கு இடையூறு விளைவித்ததுடன் பொலிஸாரும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு, பொங்கல் பொங்குவதற்குத் தடையேற்படுத்தினர்.
இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் அப்பகுதியில் இருந்தவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன், ‘குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, அப்பகுதிக்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிங்களவர்களைக் காட்டிலும் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரே மிகமோசமாக நடந்துகொண்டதாகவும், தம்மை மிலேச்சத்தனமான முறையில் தாக்க முற்பட்டதாகவும், அங்கிருந்த பெண்களைத் தகாதமுறையில் வெளியேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்மக்கள் குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் ஈடுபட்டுவருவதாகவும், அதற்குத் தொடர்ந்தும் இடமளிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்திய கஜேந்திரன், ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியை விட்டுக்கொடுப்பதற்குத் தாம் ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, குருந்தூர் மலையில் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், அங்குசென்ற தமிழ்மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, இந்துக்களின் வழிபாட்டு உரிமை மீறப்படுவது குறித்துத் தனது தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக இதனை அவரது கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகவும், தமிழ்மக்களின் மதவழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவிருப்பதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து இந்தியப்பிரதமர் மற்றும் இந்திய அரசியல் தலைவர்களிடத்திலும் வலியுறுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
‘ஏற்கனவே குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்டிருக்கும் அதேவேளை, இவ்விவகாரத்தில் தாம் தவறானமுறையில் செயற்பட்டிருப்பதைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதிக்கு வழிபடச்சென்ற தமிழ்மக்களுக்கு எதிராக பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டிருப்பது இன, மதவாதத்தின் உச்சக்கட்டமேயாகும்’ என்று ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுவீடனில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டமைக்குக் கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கக்கூடாது என்றும், இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.