உக்ரைனை வீரர்களை எதிர்க்க ரஷியா அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது: ஜெலன்ஸ்கி!!
ரஷிய- உக்ரைன் போர் 507-வது நாளை எட்டிவிட்டது. ரஷிய படைகளை பின்னுக்கு தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். Powered By இந்நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷியா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. முன்னேறும் ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் நாம் நமது போர் படைப்பிரிவின் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற வேண்டும்.
தற்போது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் பெலாரஸ் பகுதியில் இருந்து இல்லை என முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது. அங்குள்ள நிலவரத்தை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன். ஆனால் எனது முழு கவனமும் தற்போது போரின் முன்வரிசையை குறித்தே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படை, பெலாரஸ் துருப்புகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியில் ஜெலன்ஸ்கியின் இந்த உரை பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கி வரும் மேற்கத்திய நட்பு நாடுகள், போரில் வேகமாக முன்னேற உக்ரைனுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என ஜெலன்ஸ்கியின் அலுவலக தலைவர் ஆன்ட்ரி எர்மக் கூறியிருக்கிறார். வாக்னர் படையால் கைப்பற்றப்பட்ட கிழக்கு நகரமான பாக்முட் அருகே உள்ள பகுதிகளையும், நாட்டின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களையும் மீண்டும் கைப்பற்றுவதில் மட்டுமே உக்ரைனின் பல வார கால எதிர்த்தாக்குதல் இருந்து வருகிறது. கிரிமியா தீபகற்பத்தில் ரஷிய படைகள் நிறுவியுள்ள தரைப்பாலத்தை துண்டிக்க உக்ரேனியப் படைகள் முயற்சி செய்து வருகின்றன.