டெல்லியில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம்… மக்கள் இந்த சாலைகளில் செல்லவேண்டாம்!!
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்நதுளள்து. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கான் மார்க்கெட், தீன் மூர்த்தி ரவுண்ட்-அபவுட், ஜிஜிஆர்-பிடிஆர், ஏ-பாயிண்ட் டு டபிள்யூ-பாயிண்ட், கம்லா எக்ஸ்பிரஸ் பில்டிங், ஆண்ட்ரூஸ் கஞ்ச், கான்பூர் டி-பாயின்ட், பைரன் மார்க் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள வழித்தடம் உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும்படி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.