அடுத்த கட்டம் ஜனவரியில் ஆரம்பமாகும் !!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத திட்டத்தின் முதலாவது கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், 91.27 மில்லியன் டொலர் செலவில் இந்தியா இந்த கொழும்பு – யாழ் புகையிரத போக்குவரத்து திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
இதன் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு , புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய இவற்றில் பயணிக்கும் புகையிரதங்கள் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும். இதனால் கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கிடையிலான பயண நேரம் பெருமளவில் குறைவடையும்.
எவ்வாறிருப்பினும், இது இலங்கையின் முதலாவது புகையிரத திட்டம் அல்ல. இதற்கு முன்னர் சுனாமியின் போது ஏற்பட்ட விபத்தால் சேதமடைந்த தெற்கு புகையிரத பாதையும் இந்தியாவினால் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்தியா இதுவரை சுமார் 300 கி.மீ புகையிரத பாதையை மேம்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் சுமார் 330 கி.மீ தூரத்திற்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளையும் வழங்கியுள்ளது.