திருப்பதி அருகே செம்மரங்கள் வெட்டி கடத்திய தமிழர்கள் 25 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் விலை மதிப்பு மிக்க செம்மரங்கள் உள்ளன.செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக விலை காரணமாக இந்த கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. செம்மரங்கள் கடத்தலை தடுக்க சிறப்பு படை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. செம்மர கடத்தல் சிறப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள இஞ்ச தும்லா வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செம்மரம் வெட்டி கடத்தியதாக 5 தமிழர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதேபோல சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பீலேரு பகுதியில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்தனர். அவர்களை சிறப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் வனப்பகுதிக்குள் கும்பல் தப்பி ஓடினர் .போலீசார் விரட்டிச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்து. 20 பேரையும் கைது செய்தனர். 2 இடங்களில் நடந்த அதிரடி வேட்டையில் பிடிப்பட்ட 25 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 19 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தெரிவித்தார்.