;
Athirady Tamil News

உலக பாம்புகள் தினம்: வம்பு பண்ணாமல் இருந்தால் பாம்புகள் எதுவும் செய்யாது- 6 ஆயிரம் பாம்புகளை பிடித்த பெண் கூறும் தகவல்கள்!!

0

அட… பாம்பை பார்த்தா இவ்வளவு பயப்படுறீங்க? அதுவும் நம்மோடு வாழக்கூடியதுதான். அவைகளை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என்கிறார் வன உயிரின மறுவாழ்வுத்துறை முதன்மை ஒருங்கிணைப்பாளர் வேதப்பிரியா கணேசன். பாம்புகளை பற்றி அவர் கூறிய சுவாரஸ்ய தகல்கள் வருமாறு:- சென்னையில் மட்டும் 50 முதல் 60 வகையான பாம்புகள் உள்ளன. இதில் நல்ல பாம்பு, கட்டு வீரியன், கண்ணாடி வீரியன், சுருட்டை வீரியன், பூபாம்பு ஆகிய 5 ரகங்களும்தான் அதிக விஷத்தன்மை கொண்டவை. விஷம் என்பதை விட பாம்புகளின் செரிமானத்துக்கான திரவம்தான் அது. கட்டு வீரியன் வகை பாம்புகள் பயந்த சுபாவம் கொண்டவை. அடர்ந்த புதர் பகுதிகளில்தான் வாழும்.

பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் வெளியே வரும். நல்ல பாம்புவை மனிதர்கள் வழிபடும் அளவுக்கு மாறிவிட்டதால் அவைகளும் மனிதர்களோடு கலந்து விட்டன என்றே சொல்லலாம். பொதுவாக மழைக் காலங்களில் பாதுகாப்பான இடம் தேடி பாம்புகள் வெளியே வரும். பாம்பை பார்த்ததும் அதனிடம் வம்பு பண்ணாமல் அமைதியாக நின்றால் போதும். அதுவும் அமைதியாக சென்று விடும். பாம்புக்கு காது கிடையாது. ஆனால் நம் நடந்து செல்லும் அதிர்வுகளை துல்லியமாக உணரும். எந்த பாம்பும் உடனே கடிக்காது. ஒன்றிரண்டு முறை படம் எடுத்து எச்சரிக்கும். பூபாம்பு மிகச் சிறியது. ஷூ கயிறுஅளவுக்குதான் இருக்கும். விஷத்தன்மை அதிகம் உண்டு. சென்னையில் அரிதாகத் தான் காணகிடைக்கும். வயது முதிர்ந்த பாம்புகள் தன்னிடம் சுரக்கும் விஷத்தை வேஸ்ட் பண்ண விரும்பாது. இரையை எடுப்பதற்காகத்தான் பயன்படுத்தும்.

குட்டி பாம்புகள் தான் தெரியாமல் அதிக அளவு கடிக்கும் போது விஷத்தை பயன்படுத்தி விடும். அதனால்தான் குட்டி பாம்புகள் கடித்தால் அதிக விஷம் உடலில் ஏறுவதுண்டு. எதிர்பாராத வகையில் கடித்தாலும் பாம்பு கடித்து விட்டதே என்று பயப்பட கூடாது. அதற்கான மருந்து எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் இருக்கிறது. பூனை பாம்பு, பச்சை பாம்பு, நாய் முக பாம்பு ஆகிய ரகங்கள் லேசான விஷத்தன்மை கொண்டவை. இவை கடித்தால் உயிருக்கு ஆபத்து நேராது. ஆனால் அலர்ஜி, தோல் நோய்கள் ஏற்படும். தரையில் மட்டுமல்ல. தண்ணீரிலும் பாம்புகள் வாழ்கின்றன. குறிப்பாக கடலிலும் ‘கடல் பாம்பு’ உண்டு. மற்ற பாம்புகளை விட இந்த பாம்புதான் அதிக விஷத்தன்மை கொண்டது. இதற்கு தடுப்பு மருந்து கூட கிடையாது.

வீடுகளிலோ, கட்டிடங்களிலோ பாம்புகள் வந்தால் பிடிக்க அழைக்கிறார்கள். நாங்கள் செல்வதற்குள் கூட்டம் கூடி விடும். பாம்புக்கும் தொந்தரவு கொடுக்க தொடங்கி விடுவார்கள். அதனால்தான் தனக்கு ஆபத்து என்று கருதி அதுவும் எதிர்க்க தொடங்கி விடுகிறது. அமைதியாக நாம் அதை பிடிக்க நெருங்கும் போது, நம்மால் அதற்கு எதுவும் நேராது என்பதை அது உணர்ந்து கொள்ளும். பிடித்தாலும் எதுவும் செய்யாது. அழைப்பு வந்தால் பெரும்பாலும் பாம்புகளை பிடிக்க நான் தனியாகத்தான் செல்வேன். இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து காடுகளுக்குள் விட்டுள்ளேன். இதுவரை கடிவாங்கியதில்லை. அவைகளின் அன்பை மட்டுமே பார்த்துள்ளேன் என்கிறார் சர்வ சாதாரணமாக இந்த பாம்பு பெண்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.