யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தற்கொலை முயற்சி!!
யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்கு தானே பெற்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடித்து தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். ஆவரங்கால் – சர்வோதயா பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அயல் வீட்டுப் பெண்ணை காதலித்து இருவரும் சுய விருப்பில் திருமணம் செய்ய சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் வீட்டார் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனின் வீட்டார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணின் தந்தை மற்றும் பெரிய தகப்பனார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வீட்டார் உள்ளிட்ட மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்யவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் குறித்த 5 சந்தேகநபர்களையும் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ள நிலையில், தவறு செய்யாத தாம் ஏன் முன்னிலையாக வேண்டும்? தனது மகளை அவதூறாக பேசிய அயல் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி தனக்குத்தானே பெற்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.