சீன இளைஞர்களை துரத்தும் வேலைவாய்ப்பின்மை: ஜூன் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரிப்பு!!
சீனாவின் இரண்டாவது காலண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை அந்நாடு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, உள்நாட்டு உற்பத்தி 6.3% என உயர்ந்திருந்தாலும் பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்திருந்ததை விட இது குறைவு என தெரிகிறது. அதே சமயம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஜூன் மாதத்திற்கான 16 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை 21.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், அனைவருக்குமான வேலைவாய்ப்பின்மை நகரங்களில் ஜூன் மாதம் 5.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
“சீனா ஒரு சிக்கலான புவிசார் அரசியல் பின்னணியில் மாறி வரும் பன்னாட்டு பொருளாதார சூழலை சந்தித்து வருகிறது என்றும் வேலைவாய்ப்பின்மை இன்னும் உயரலாம்; ஆனால் ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு குறையும்” என சீனாவின் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபூ லிங்ஹுய் தெரிவித்தார். சீனாவின் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்து கடந்த மே மாதம் கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோவிட் காலத்திற்கு முன்பு 10% என இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் 20.4% என இரட்டிப்பானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இளைஞர்களுக்கு குறைந்தளவே அனுபவம் இருப்பதால், பொருளாதார சுழற்சிகள் நடைபெறும் போதெல்லாம் வேலைவாய்ப்பின்மையில் அவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
கல்லூரிகளிலிருந்து பெறும் திறமைகளுக்கும், தொழில்துறைக்கு தேவைப்படும் திறனுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருப்பதுதான் அடிப்படை காரணமாக அந்த அறிக்கை தெரிவித்திருந்தது குறிப்பத்தக்கது. சீன பொருளாதாரத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என அந்நாடு கருதுவதால் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு ராணுவம் உட்பட அரசாங்க நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க பல வழிமுறைகளை உறுதி செய்துள்ளது. இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேல் (11.58 மில்லியன்) கல்லூரி படிப்பை முடிக்கும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை தேடி வெளிவர போகிறார்கள் என்பதால் பொருளாதார வல்லுனர்கள் சீனா இந்த நிலையை எதிர்கொள்ள எடுக்க போகும் நடவடிக்கைகளையும் அது எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பதையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.