பா.ஜ.க.வுக்கு எதிரான வியூகம் என்ன..? பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை!!
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் நடைபெறும் இக்கூட்டத்தில், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, திருமாவளவன், கேசி வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளையும் தொடர்ந்து நடைபெறும். இன்றைய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்கவில்லை. நாளைய கூட்டத்தில் சரத் பவார் மற்றும் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.