யூடியூப் வீடியோ மூலம் ஒரு கோடிக்கு மேல் வருமானம்: வீடு தேடிவந்த ரெய்டு!!
யூடியூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லீம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்திருக்கிறது.
இந்த சேனல் நடத்தி வருபவரான தஸ்லீம், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, அவர் கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதித்திருக்கிறார். தஸ்லீம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர் குடும்பம் இதனை மறுத்துள்ளது. இதுகுறித்து தஸ்லீமின் சகோதரர் ஃபெரோஸ் கூறும்போது, ”டிரேடிங் ஹப் 3.0 (Trading Hub 3.0) என்ற யூடியூப் கணக்கை நிர்வகித்து வரும் தஸ்லீம், ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வருமானத்திற்கு அவர் வருமான வரியும் செலுத்தி வருகிறார்.
மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்திற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறோம். வேறு எந்த தவறான செயலும் செய்யவில்லை. சேனலில் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இந்த ரெய்டு ஒரு திட்டமிடப்பட்ட சதி.” இவ்வாறு ஃபெரோஸ் கூறியிருக்கிறார். தனது மகன் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக தஸ்லிமின் தாய் கூறியுள்ளார்.