பாட்னா கூட்டத்திற்குப் பிறகு மலைத்துப்போன பிரதமர், என்.டி.ஏ. குறித்து யோசித்துள்ளார்- ஜெய்ராம் ரமேஷ்!!
மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது.
இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ”பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார். அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்” என்றார்.