;
Athirady Tamil News

நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டம் !!

0

நாளைய (18) தினம் நாட்டின் தேர்தல் வேலைத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பது குறித்து ஆராய தெரிவுக் குழவென்றை நியமிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (17) விடுத்துள்ள விசேட காணொலி ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் திடீரென நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டத்திற்கு இன்று(17) அழைப்பு விடுத்து மேற்படி முன்மொழிவுகளை சமர்பித்துள்ளது.

இவ்விடயத்தில் அரசாங்கம் மெல்ல கவனம் செலுத்தி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு மீதும், நீதிமன்றத்தின் முன்னுள்ள விசாரணைகளிலும் செல்வாக்குச் செலுத்தி ஜனநாயக நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும்.

இச்செயற்பாடு, நீதித்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செல்வாக்கு செலுத்தும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நாளை தினம் நாடாளுமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இச்செயற்பாடு தற்போதைய தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல், வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும் என்பதையும்,இல்லாவிட்டால், நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன் ஆஜராக வேண்டும் என்ற தெளிவான முறையற்ற அச்சுறுத்தல் விடுப்பதற்கே ஆகும்.

அதேபோன்று மேலான நீதிமன்ற நீதிபதிகள் அரசின் கருத்துக்களுக்கு ஏற்ப செயற்படவில்லை என்றால், நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தவில்லை என்றால் மேலான நீதிபதிகளை தெரிவுக் குழு முன் கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கவும் முடியும் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது.

இந்த அரசியல் சூதாட்டதை இந்த அரசியல் சூனியத்தை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடக்கும்.

உண்மையில், இந்த அரசாங்கம் அதன் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் இறையாண்மையையும், சர்வஜன வாக்குரிமையையும் மக்களுக்கு மறுக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் என்ற தொனிப்பொருளில் அரசாங்கம் நீதிமன்றத்திற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அழுத்தம் கொடுக்கப் போகின்றது.

நாடாளுமன்றத்திலுள்ள மொட்டு உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் அல்லாது, 220 இலட்சம் மக்களினது சிறப்புரிமைகளுமே மீறப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க இடமளிக்க மாட்டோம்.

சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணைக்குழு மீது செல்வாக்கு செலுத்த இடமளிக்க மாட்டோம்” என்றார்.

மேலும், தனியாகவன்றி எதிர்க்கட்சியின் சகல தரப்புகளையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நீதித்துறையின் சுதந்திரத்தையும் தேர்தல் ஆணைக்குழுவின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் செயற்படுவோம்.

அத்துடன், ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.