ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தீவிரமடையும் வெப்ப அலை !!
ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க கண்டங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஐரோப்பாவில் இந்த வாரம் சூழல் வெப்பநிலையானது சாதனை மட்டத்தை தொடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலையானது சாதனை மட்டத்தை எட்டியுள்ளது.
வட ஆபிரிக்காவில் உருவாகியுள்ள சரோன் என்ற புதிய எதிர்சூழற்காற்று காரணமாக தெற்கு ஐரோப்பாவில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையானது 45 பாகை செல்சியஸ்சை தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் சிசிலி மற்றும் சர்டீனியா தீவுகளில் வெப்பநிலையானது 48 பாகை செல்சியஸ் என்ற சாதனை மட்டத்தை எட்டும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஸ்பெய்னிலும் புதிய வெப்ப அலைத் தாக்கம் எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், கேனரி தீவுகளில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை எட்டியுள்ளது.
பல்மா தீவுகளில் காட்டுத் தீ காரணமாக 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தின் மரண பள்ளத்தாக்கில் வெப்பநிலையானது 53.3 பாகை செல்சியஸ் என்ற சாதனை மட்டத்தை பதிவு செய்துள்ளது.
இதனிடையே ஆசியாவிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருவதுடன், சீனாவின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதியுயர் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஷின்ஜியாங் மாகாணத்தின் ஷன்பௌவ் நகரில் இன்று 52.2 பாகை செல்சியஸ் என்ற மிக உயர்த்த வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், இதற்கு முன்னர் பதிவான வெப்பநிலையை விட இது 1.7 பாகை செல்சியஸ் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள 47 நிர்வாக அலகுகளில் 20 இல் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு இதயக் கோளாறு ஏற்படும் அளவிற்கு வெப்பநிலை உயர்வடையும் என அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோ மற்றும் ஏனைய இடங்களில் சுமார் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்வடையும் எனவும் இதனால் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.