அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தங்க சுரங்கங்களில் ஈடுபட்ட 57 பேர் கைது… 27 படகுகள் தீ வைத்து எரிப்பு!!!!
மேசான் காடுகளில் சட்ட விரோதமான தங்கச் சுரங்கத்தை கண்டுபிடித்து ,27 டிரெட்ஜெர் படகுகளை பொலிவியன் நாட்டு போலீசார் எரித்து அழித்தனர். ஆனால் பொதுமக்கள் போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். அமேசான் காடுகள் வழியாகப் பாயும் ஆறுகளுக்கு அடியில் உள்ள மணற்பரப்பில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதால் அந்த மணலை டிரெட்ஜெர் படகுகள் மூலம் அள்ளி, தங்கத் துகள்களை சலித்தெடுக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சுற்றுச்சூழலும், மீன்களின் இனப்பெருக்கமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது
இதையடுத்து சட்ட விரோத சுரங்கங்களை தடுக்கும் முயற்சியில் வடக்கு பொலிவியாவில் ராணுவத்தினருடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெனி என்ற பகுதியில் போலீசாரும், ராணுவமும் இணைந்து 6 நாட்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 டிரெட்ஜர் படகுகளை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். அரசால் வெளியிடப்பட்ட வீடியோ படகுகள் எரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இதற்கு பதிலடியாக சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் சம்மந்தப்பட்ட சுரங்கங்கள் சட்டப்பூர்வமாக செயல்படுவதாக கூறி வீதிகளில் இறங்கி போராடினர்.