புதுசுக்கு நிகரான மவுசு: ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன முதல் தலைமுறை ஐபோன்!!
முதல் தலைமுறை போன் எனப்படும் 2007ம் வருட ஐபோன் ஒன்று சுமார் ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு ($190373) ஏலம் போயிருக்கிறது. இந்த ஐபோனின் அசல் விலையான சுமார் ரூ.50,000ஐ விட தற்போது ஏலம் போன தொகை 300 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. “4 ஜிபி மெமரி கொண்ட இந்த ஐபோன், வாங்கும்போது இருந்த தொழிற்சாலை பேக்கிங்குடன், நல்ல தரமான நிலையில் இருக்கிறது. இது ஒரு கிடைத்தற்கரிய உயர் ரக சேகரிக்கும் பொருள்”, என எல்சிஜி ஆக்சன்ஸ் எனும் இணைய ஏல நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது. ஏலம் தொடங்கியபோது, சுமார் ரூ.80,000 ($10,000) என முதலில் கேட்கப்பட்டது.
அதன்பின்னர் படிப்படியான ஏலத் தொகை உயர்ந்து உச்சத்தை எட்டியது. இந்த ஏலத்தில் 28 போட்டியாளர்கள் இருந்தனர். “இதன் அரிதான தன்மைதான் ஐபோன் விரும்பிகளிடையே அதற்கு ஒரு மதிப்பை உண்டாக்கியிருக்கிறது. இதன் தொடு திரைக்கோ அல்லது பொத்தான்களுக்கோ எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தது மற்றொரு அரிதான விஷயம். இதன் உரிமையாளர் இந்த மாடல்கள் தயாரிக்கப்படும் போது ஆப்பிளின் தொழிற்சாலையில், அதன் பொறியியல் பிரிவில் வேலை செய்து வந்தார்” என ஏல நிறுவனம் தெரிவித்தது.
16 வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்ஸிஸ்கோவில் ஜனவரி 2007ல் மேக்வேர்ல்ட் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த ஐபோனை அறிமுகப்படுத்தும் போது, “இந்த ஐபோனை ஆப்பிள் இன்று மீண்டும் புதிதாக கண்டெடுத்திருக்கிறது” என கூறினார். மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போன் 2007ம் வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு குறைந்துபோன விற்பனையினாலும், 8 ஜிபி மெமரியுடன் அடுத்த வடிவம் வந்ததாலும் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.