ஓகஸ்ட் முதல் அதிகரிக்கும் கட்டணம் – பிரெஞ்சு குடும்பங்களுக்கு புதிய கவலை !!
பிரான்சில் அடுத்தமாதம் முதலாம் திகதி முதல், மின்சாரக் கட்டணங்கள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் கூட்டாக இன்று காலை அறிவித்துள்ளன.
இந்தக் கட்டண அதிகரிப்பானது அனைத்து பிரெஞ்சு குடும்பங்களுக்கும் புதிய கவலையை தோற்றுவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒப்பீட்டு ரீதியாக மிகக் குறைந்த மின் கட்டணத்தை அறவிடும் நாடாக பிரான்ஸ் இருக்கும் நிலையில் தற்போது அங்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இந்தக் கட்டணங்கள் பத்துவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இனிமேல் சராசரியாக ஒரு குடும்பம் தமது வீட்டை மின்சார சக்தி மூலம் வெப்பமாக்கிக் கொள்ள தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட சராசரியாக வருடாந்தம் 160 யூரோக்களை அதிகமாக செலுத்தவேண்டும்.
அதாவது தற்போது ஆண்டுக்கு 1640 யூரோ கட்டணத்தை செலுத்திவரும் குடும்பங்கள் இனிமேல் 1800 யூரோக்களை செலுத்தவேண்டுமென அரசாங்கம் கணிப்பிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்களில் ஏற்படவுள்ள இந்த அதிகரிப்பானது ஏற்கனவே பிரான்சில் நடைமுறையில் உள்ள மின்சார கட்டணக் கவசநிலை படிப்படியாக நீக்கப்படும் என்ற பாதகமான செய்தியை நுகர்வோருக்கு வழங்குவதான கவலைகள் தலையெடுத்துள்ளன.
எனினும் மின்சாரக் கட்டணங்கள் சற்று அதிகரிக்கப்பட்டாலும் அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் நடைமுறையை விடாது என்ற உறுதிமொழிகளும் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்களிடமிருந்து வந்துள்ளன.
பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நுகர்வோரை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எரிசக்தி கட்டணக் கவச நடைமுறைக்கு அரசாங்கம் படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் 2025 ஆண்டில் இந்த கட்டணக் கவச நடைமுறை முடிவுக்கு வரும் என்ற ஊகங்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.