பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் – ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஜெலென்ஸ்கி !!
“எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
நேற்று (17) நடைபெற்ற கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து மொஸ்கோ விலகியதைத் தொடர்ந்து “ரஷ்யாவின் பைத்தியக்காரத்தனத்திலிருந்து” உலக நாடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உக்ரைனின் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா பங்கேற்றாலும் சரி பங்கேற்காவிட்டாலும் சரி உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உடன் பேசிய போது “பசியை ஆயுதமாக்கி உலகளாவிய உணவு சந்தையை சீர்குலைக்கும் ரஷ்யாவின் மற்றொரு முயற்சியாக இது இருக்கிறது” என்று ஜெலென்ஸ்கி கூறியபோது,
அதற்கு, கருங்கடல் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் முடிவு உலக நாடுகளில் உணவு தேவைப்படும் மக்களுக்கு ஒரு அடியாக இருக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதிலளித்தார்.
ஆனால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை ஸ்திரத்தன்மையை முன்னேற்றுவதற்கான எங்கள் முயற்சிகளை இது நிறுத்தாது என்றும் தொடர்ந்து கூறினார்.
உக்ரைனை நம்பியுள்ள பல்வேறு நாடுகளின் 400 மில்லியன் மக்களின் உயிருக்கு பயங்கரவாத அரசு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனைத் தடுக்க உக்ரைன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியுடன் சேர்ந்து, “உணவு வழித்தடத்தின் செயற்பாடு மற்றும் கப்பல்களின் ஆய்வு” ஆகியவற்றை தொடர முடியும் என்று உக்ரைன் அதிபர் கூறினார்.
இதன் மூலம் மக்களின் பட்டினிச்சாவை கணிசமான அளவு குறைக்க முயற்சிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.