டெல்லியில் மழை: யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- பொதுமக்கள் தவிப்பு!!
டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது. நேற்று இரவு யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்தது. இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை இது 205.45 மீட்டர் அளவில் நீர்வரத்து குறைந்தது.
இருந்த போதிலும் யமுனையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி நகரில் 25 சதவீதம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வீடுகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 41 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் உத்தர காண்ட், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 5 நாட்கள் கனமழை. மற்றும் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.