தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குக!!
பாராளுமன்றத்தில் ஏதேனும் அதிகாரம் தொடர்பில் நம்பிக்கை இருக்குமாக இருந்தாலோ, நடந்துள்ள விடயம் தொடர்பில் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தெரிவுக்குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டிய தரப்பினரிடமே அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் தெரிவுக்குழு தலைவர் பதவியை வழங்குவதானது உண்மையான குற்றவாளிகளை மாற்றி வேறு நபர்களை குற்றவாளிகளாக காட்ட வாய்ப்பாக அமையும் என்றார்.
நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தெரிவுக்குழு தொடர்பில் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுனவை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் செயலாளரே இது தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவே கட்சியின் தேசிய அமைப்பாளராக இருக்கின்றார். கட்சியின் தலைமைப் பதவியில் அப்போது ஜனாதிபதியாக இருந்தவரின் சகோதரர் ஆகும். இதனால் வங்குரோத்த நிலைமை தொடர்பில் உண்மையை அறிய வேண்டுமென்றால் இதற்கு காரணம் என்று கூறப்படும் தரப்பில் இருந்தே குழுவில் தலைவர் நியமிக்கப்படுவது நியாயமற்றது என்றார்.