புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதே எதிர்பார்ப்பு!!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு இரு மாநிலங்களுக்கு இடையிலான கடன் மறுசீரமைப்புத் திட்டம், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்களை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.