இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் !!
எமது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமெரிக்க தூதுவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காணி உரிமை, காணாமல் போனவர்களின் விடுதலை, மனித புதைக்குழி, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் சமூகத்துக்காக அவர்கள் மேற்கொள்ளும் இந்த விடயங்களை நாங்கள் வரவேற்கிறோம்.அதேவேளை பலஸ்தீனில் இஸ்ரேல் அரசாங்கம் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அமரிக்கா தூதரகம் ஆதரவளித்து உதவி வருகின்றது.
எனவே இவ்வாறான இரட்டை நிலைப்பாட்டை வல்லரச நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பலஸ்தீனில் அகதிமுகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தொடர்ந்து இரண்டு தினங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த முகாம் முற்றாக சேதமடைந்து 12பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு தினங்களில் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடம் இந்த சபையில் கேட்டுக்கொண்டிருந்தேன். குறைந்த பட்சம் கவலையையாவது தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன். இது தொடர்பாக கண்டனத்தை வெளியிடுவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால் இதுவரை அது தொடர்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
நாங்கள் பலஸ்தீனியர்களின் நண்பர்கள் என்கின்றோம். இலங்கை, பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறோம். ஆனால் ஏன் இந்த தாக்குதல் தொடர்பில் இலங்கை மெளனமாக இருக்கிறது என்பதுதான் புரியாமலுள்ளது என்றார்.