அரச பொறிமுறையை டிஜிட்டலாக்கவும் !!
இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றும் அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நிதியமைச்சும் மத்திய வங்கியும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பாராளுமன்றத்தில் செயற்படும் குழுக்கள் பொருத்தமான மாற்று யோசனைகளை முன்வைக்க முடியுமானால் நாம் அது தொடர்பில் கவனம் செலுத்த தயாராகவே உள்ளோம்.
அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும்.
அந்த வகையில் இலங்கை சுங்கம், வருமான வரி திணைக்களம், கலால் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு முழுமையான டிஜிட்டல் மயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாதிருந்தால் ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களை ஒருபோதும் தடுக்க முடியாமல் போகும்.
ஒருபுறம் நாம் அரச நிர்வாகத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதே வேளை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வுள்ள இலஞ்ச ஊழல் சட்டமானது இது போன்ற நடவடிக்கைகள் இடம் பெறாமல் தடுப்பதற்கு முக்கியமான வழிகளை வகுக்கும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.