சரிவை சந்திக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி!!
சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். உடைந்த சோவியத் ஒன்றிய நாடுகளில், பல வருடங்களுக்கு முன் ‘நிற புரட்சி’ எனப்படும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் கோரும் மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன. இதனை போன்று சீனாவில் நடத்த சில அயல்நாட்டு சக்திகள் முயற்சிப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் நுழைவதை சீனா விரும்பவில்லை என சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங் தெரிவித்தார். மேலும் அவர், போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
2022-ம் ஆண்டு இளம் தொண்டர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றும் தற்போது வெளிவந்திருக்கிறது. அதில் மார்க்ஸிஸ மற்றும் கம்யூனிஸ கொள்கைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் 90-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டதை போன்று சீனாவிலும் கம்யூனிஸம் அழிந்து, சீனாவும் சுக்குநூறாகி விடும் அபாயம் உள்ளதாக கூறியிருக்கிறார். திரள்திரளாக உறுப்பினர்கள் கம்யூனிஸ கொள்கையிலும் கட்சியிலும் இருந்து விலகியதால்தான் சோவியத் ஒன்றியம் உடைய தொடங்கியது குறிப்படத்தக்கது. அதேபோல் சீனாவிலும் நடக்கலாம் என கம்யூனிஸ்ட் கட்சி அச்சப்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டிலும், உலகெங்கிலும் பல நாடுகளுடனும் பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களை சீனா எதிர்கொண்டு வருகிறது. கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததே, கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என அக்கட்சி கருதுகிறது.
ஆனால் மக்களின் குரலுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கில் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் சீனாவில் தற்போது அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்காகவே கட்சியில் உறுப்பினர்கள் உள்ளனரே தவிர கொள்கைகளுக்காக கட்சியில் இருக்குமாறு அதிபர் விடுத்த அழைப்பிற்கு போதிய வரவேற்பில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. உலக வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியான சீனாவின் ஒரே கட்சியில் இத்தகைய ஆபத்து உருவாகியிருப்பதை அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.