சென்னையில் பாரம்பரிய சிற்ப கலையை பறைசாற்றும் ‘கல் தேர்’பாதுகாக்கப்படுமா?!!
சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் திகழ்ந்து வருகிறது. சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வள்ளுவர் கோட்டம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் நினைவை போற்றும் வகையில் கட்டப்பட்ட ஒரு வரலாற்று நினைவு சின்னம் ஆகும்.
அற்புத கலைப்படைப்பு 1975-ல் தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் இது கட்டப்பட்டதாகும். புகழ்பெற்ற வள்ளுவர் கோட்டத்தின் கட்டுமானம் அற்புதமான கலைப்படைப்பாக திகழ்கிறது. தமிழகம் மற்றும் வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட வருகிறார்கள். இதன் நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். வள்ளுவர் கோட்டத்தின் கட்டுமான அமைப்பு, கல்தேர் ஆகியவற்றின் அதிசயங்களை கண்டு பார்வையாளர்கள் வியந்து வருகிறார்கள். கல்தேர் இந்த கல்தேர் 39 மீட்டர் உயரம் கொண்டது. கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கல்தேர் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது ஆகும். சிறந்த கட்டிட சிற்பக்கலை நிபுணரான கணபதி ஸ்தபதி இதனை அழகாக செதுக்கி வடிவமைத்து கட்டி உள்ளார். வள்ளுவர் கோட்டத்தின் ஆடிட்டோரியத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமரும் இடவசதி உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மண்டபம் மிகவும் தனித்துவ அம்சம் கொண்டது. எந்த தூணின் துணையும் இல்லாமல் நிற்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் 1330 பாடல்களை இங்குள்ள மண்டபத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் கிரானைட் கற்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டு பார்வையாளர்கள் வியந்து வருகிறார்கள். புதுப்பிப்பு பணி இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தை ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கு பொதுப் பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. வள்ளுவர் கோட்டம் பராமரிப்பு செய்யப்படாத நிலையை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து வருகிறார்கள். பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யப்படாததால் ஆங்காங்கே குப்பைகளாக காட்சி அளிக்கிறது. கட்டிடத்திற்கு வர்ணம் பூசி பராமரிப்பு செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள் பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் புதுப்பிக்கப்பட வேண்டும். இங்குள்ள கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் நடத்தப்படும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சென்னை வள்ளுவர் கோட்டம் கட்டிடம் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பாழடைந்து வருகிறது.
இங்குள்ள மண்டபத்தின் மின் விசிறிகள் அனைத்தும் பழுதாகி உள்ளன. எக்ஸாஸ்டர் பேன்கள் அனைத்தும் ஒயர்கள் அறுந்து கிடக்கின்றன. தரைகள் அனைத்தும் தூசி அடைந்து உள்ளன. காதல் ஜோடிகள் பராமரிப்பு பணிகள் செய்யாததால் கட்டிடங்களில் மழைத் தண்ணீர் தேங்கி பழுதடைந்து வருகிறது. இங்கு பாதுகாவலர் வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து காதல் லீலைகள் புரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு பொது மக்கள் இங்கு வர பயப்படுகிறார்கள். சமூக விரோத செயல்கள் நடைபெறும் வகையில் உள்ளன.
உடனடியாக இங்கு பாதுகாவலர்கள் நியமித்து ஒழுங்கு படுத்த வேண்டும். பழமையான கட்டிடத்தை புதுப்பித்து பாதுகாக்க வேண்டும். இங்குள்ள வளாகம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் போல காட்சி அளிக்கின்றன. இங்குள்ள நீரூற்றுகுளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மேலும் வளாகம் முழுவதும் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கட்டிடத்தை புதுப்பிக்க பொதுப் பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நவீன வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.