திடீர் வெள்ளப்பெருக்கால் தடை.. மீண்டும் மூடப்பட்ட கோவை குற்றாலம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
கோவை மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்குள்ள அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் கோவை மட்டு மின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். அவர்கள் அங்குள்ள அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து செல்வார்கள். கேரளாவில் பெய்து வரும் மழையால் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் கடந்த 5-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பொது மக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர். கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது.
இதன் காரணமாக நேற்று முதல் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறுவாணி பகுதியில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். அவர்கள் அங்குள்ள சாடிவயல் ஒடையில் குளித்து விட்டு திரும்பி வந்தனர்.