பிரதமர் மோடியுடன் பேசுவேன்: அமைச்சர் டக்ளஸ் !!
ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா தெரிவித்துள்ளளார்.
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இன்று (19) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சரிடம், இந்திய இழுவைப் படகுகளால் தமது கடல் வளம், மீன் பிடி உபகரணங்கள் என்பன அழிக்கப்படுவதாகவும் அதனால் தங்களது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் அமைச்சர் ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது இந்தியப் பிரதமர் மற்றும் உயர்மட்ட அதிகாரிளிடம் இப் பிரச்சினை தொடர்பாக பேசி இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
அத்துடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், அவைதொடர்பான கோரிக்கை கடிதங்களையும் அமைச்சரிடம் ஒப்படைத்தனர்.