மணிப்பூர் விஷயத்தில் ரொம்ப லேட்.. நிலைமை கைமீறி போனதால் பேசுகிறார்: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!!
மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது.
இந்நிலையில் மே மாதம் அங்கு நடைபெற்றதாக கூறப்படும் ஒரு கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் மணிப்பூரின் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் மற்றொரு இனத்தை சேர்ந்த இரு பெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். ‘வலியாலும், கோபத்தாலும் என் மனம் கொந்தளிக்கிறது. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது. மணிப்பூர் மகள்களுக்கு நிகழ்ந்திருப்பது மன்னிக்க முடியாதது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்கள், ராஜஸ்தான், சட்டிஸ்கார், மணிப்பூர் என எந்த மாநிலத்தில் நடந்தாலும் அதற்கெதிராக அனைத்து மாநில முதல்வர்களும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்’, என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: மணிப்பூர் குறித்து இத்தனை நாட்கள் பேசாமல் இருந்து விட்டு தற்போது நிலைமை கை மீறி போனதும் பிரதமர் பேசுகிறார். புரிந்து கொள்ள முடியாத வகையில் 1800 மணி நேரம் பேசாமல் இருந்து விட்டு தற்போது 30 வினாடிகள் பேசுவது மன்னிக்க கூடியது அல்ல. மணிப்பூரில் நடைபெற்ற குற்றங்கள் போல் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிலையில் பிற மாநிலங்களை அதனோடு ஒப்பிட்டு பேசுவது திசைதிருப்பும் முயற்சி. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றோ அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், மணிப்பூர் சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 64 நாட்கள் கழித்துதான் முதல்வர் பிரேன் சிங் கைது நடவடிக்கை குறித்து பேசுகிறார். இது மிகவும் தாமதமான நடவடிக்கை. வெறும் வார்த்தைகள் இனி பலன் அளிக்காது, செயல்களில் காட்ட வேண்டும். பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.