வீரர்-வீராங்கனைகள் போராட்டத்துக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு ஆகஸ்ட் 7-ந் தேதி தேர்தல்!!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பதவி விலக கோரியும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் வீரர்-வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலை ஜூலை 11-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்று உரிமை கோரிய அசாம் மல்யுத்த சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கவுகாத்தி ஐகோர்ட்டு, தேர்தலை நடத்த தடை விதித்தது. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே கவுகாத்தி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு வருகிற ஆகஸ்ட் 7-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 4 மற்றும் 6-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவு செய்யபட்டது. பின்னர் 11-ந் தேதியை தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு ஆகஸ்ட் 7-ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.