ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம்: பல நாடுகளில் வேலைநிறுத்தம் ஏற்படும் அபாயம்!!
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல நாடுகள், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் திணறி வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.
வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கடலோர பகுதிகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவை தொட்டிருக்கிறது. இத்தாலியின் சிசிலி, ட்ரப்பானி, சியாக்கா மற்றும் சர்டீனியா பகுதிகளில் வெப்பம் 46 டிகிரிக்கு மேல் பதிவானது. ரோம் நகரில் அதிகரித்த ஏர்கண்டிஷனர்களின் பயன்பாட்டால், மின்சார ‘கிரிட்’களில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மின்சார வினியோகம் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்படும் நிலை உருவானது. படுவா நகரில் ஒரு முதியவரும், மிலன் நகரில் ஒரு 44-வயது நபரும் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தனர். இச்சம்பவங்களுக்கு பிறகு அதிகரித்து வரும் வெப்பம் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இத்தாலியில் தொழிற்சாலை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கார் மற்றும் பேட்டரி தொழிற்சாலைகளில் பணியாற்றூம் பெரும்பாலான தொழிலாளர்கள் வெப்பம் தாக்குப்பிடிக்க முடியாமல் பணிக்கு செல்வதை தவிர்க்கின்றனர். ஸ்டெலாண்டிஸ் எனும் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலை செய்யும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மேக்னட்டி மரேலி தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். விவசாயம், கட்டிட துறை போன்ற துறைகளிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. மார்சிகா, அப்ருஸோ ஆகிய இடங்களில் பண்ணை வேலையாட்கள் வெப்பத்தை தவிர்க்கும் விதமாக அதிகாலை 4 மணியிலிருந்து 11 மணி வரை மட்டுமே வேலை செய்கின்றனர். வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் மக்களுக்கு உதவ ஒரு தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறை நிறுவப்படும் என அறிவித்துள்ள இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரேஸியோ ஷில்லாஸி “அதிகளவில் நீர் அருந்துவதும், காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதும், கொழுப்புச்சத்து நிறைந்த உணவையும் மதுவையும் தவிர்ப்பதும், வெப்பத்திலிருந்து காத்து கொள்ள உதவும் என்றும் குழந்தைகள், முதியோர்கள், மற்றும் சுலபமாக பாதிக்கப்படக்கூடிய உடல்நிலை உடையவர்கள் ஆகியோரை காக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
மற்றொரு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட அக்ரோபொலிஸ் சுற்றுலா தலத்தில் சென்ற வார இறுதியிலிருந்தே அதிக வெப்பம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணியாற்றுபவர்கள் 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். ஏதென்ஸ் நகரை சுற்றி ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீ பரவலை தடுக்க இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன. ஸ்பெயின் நாட்டின் கடலோர பகுதிகளில் கடற்கரை நீரின் வெப்ப அளவு 24.6 டிகிரி செல்சியஸ் அளவை தொட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்படலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.