ராணியின் மரணத்தை தொடர்ந்து மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்: இந்த வாரம் அறிமுகம்!!
இங்கிலாந்தில் புதிதாக மன்னராக பதவியேற்றுள்ள 3ம் சார்லஸ் பெயரில் புதிய பாஸ்போர்ட் அறிமுகம் ஆகிறது. இங்கிலாந்தின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானார்.கடந்த 1952ஆம் ஆண்டு பதவியேற்ற ராணி எலிசபெத் சுமார் 70 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். ராணியின் மறைவுக்கு பின் அவரது மூத்த மகனான 3ம் சார்லஸ் அரசராக பதவியேற்றார். இங்கிலாந்தில் வரலாற்று ரீதியாக மன்னர் அல்லது அரசியின் பெயரில்தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதல்முறையாக 3ம் சார்லஸ் மன்னர் பெயரில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மன் கூறுகையில்,‘‘ ராணியின் பெயரில் வழங்கப்பட்டு வந்த பாஸ்போர்ட்டை தான் பெரும்பாலான மக்கள் பார்த்துள்ளனர். வரலாற்றில் முதல்முறையாக 70 ஆண்டுகளுக்கு பின் மன்னரின் பெயரில் இந்த வாரம் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது’’ என்றார்.