தேர்தல் திட்டம்: எம்.பி.க்களை 10 குழுவாக பிரித்து தினந்தோறும் சந்திக்கிறார் பிரதமர் மோடி!!
மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது.
தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் குறித்து திட்டம் வகுக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரித்து அவர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. பிராந்தியம் வகையில் குறிவைக்கும் நோக்கமாக இது பார்க்கப்படுகிறது. ஜூலை 25-ந்தேதியில் இருந்து இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த எம்.பி.க்கள் குழு பிராந்தியம் ரீதியில் பிரிக்கப்படுகிறது. ஒவவொரு குரூப்பிலும் இரண்டு பிராந்தியத்தில் உள்ள எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். முதல் கூட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்திய எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஒரு கூட்டம், இரவு 7.30 மணிக்கு ஒரு கூட்டம் என இரண்டு கூட்டமாக நடத்த இருக்கிறார்.
பிரதமர் மோடியுடன் பா.ஜனதா தலைவர் நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஒவ்வொரு கூட்டத்திலும் இருப்பார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள சஞ்சீவ் பல்யான், அஜய் பாத், பா.ஜனதா கட்சி அதிகாரிகள், மத்திய அமைச்சர்களும் இடம் பெற இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 25 வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் இநத் கூட்டம் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் 2024 மக்களவை தேர்தலை பா.ஜனதா சந்திக்க உள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.