நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை -ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால் பரபரப்பு !!
ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் குழப்ப நிலையை அடுத்து வாக்னர் வாடகை படையினர் பெலாரஸிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு பெலாரஸ் நாட்டு இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் வாக்னர் படையினர் பெலாரஸிற்கு ஏன் அனுப்பப்பட்டனர் என்ற அவிழாத முடிச்சை வெளியிட்டுள்ளார் ரஷ்யாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஆண்ட்ரே கர்டபோலோவ்.
இவர் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்ய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
வாக்னர் குழுவினர் பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், உக்ரைன் நேட்டோ படைகளின் நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவுக்கு புதிய உத்தி கிட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“நேட்டோ படைகள் போலந்து, லிதுவேனியா எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உக்ரைனுக்கு ஆதரவாக அங்கிருந்து தாக்குதல் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ளும் வகையில்தான் வாக்னர் குழு பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய இடத்திலிருந்து நேட்டோ படைகளை எதிர்கொள்ள வாக்னர் குழுவுக்கு ஒருசில மணி நேரம் போதும். பெலாரஸ் நாடு ஐரோப்பாவின் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் உக்ரைனுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பெலாரஸ் ஒரு முக்கியமான மையமாக இருக்கிறது. எனவேதான் அங்கு வாக்னர் குழுவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.