;
Athirady Tamil News

சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்; எகிறும் ஏசி பில் மறுபுறம்: கையை பிசையும் அமெரிக்கர்கள்!!

0

இந்தியாவில் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை நிறுவி பயன்படுத்துவது பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர மக்களுக்கும் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஏசி வாங்க முடிந்தாலும், அதனை பராமரிக்கும் செலவும், மின்கட்டணமும் மிக அதிகம் என்பதால் பல நடுத்தர மக்கள் மின்விசிறியை கொண்டே கோடை வெயிலை சமாளித்து வருகின்றனர்.

மிகவும் பணக்கார நாடு என கருதப்படும் அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசம் என தெரிய வந்துள்ளது. மந்தமாகும் பொருளாதாரம், அதிகரிக்கும் வேலையின்மை, மற்றும் திடீரென நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுடன் கடும் வெப்ப அலையும் அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரியாகி விட்டது. ஐரோப்பாவை போன்றே அமெரிக்காவிலும் வெப்ப அலை கடுமையாக வீசுகிறது. அமெரிக்காவில் பலர், வெப்பம் காரணமாக முன்பகலுக்கு பிறகு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா, நியூ மெக்ஸிகோ மற்றும் புளோரிடா போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது தங்கள் பகுதிகளில் வெப்பநிலை மிகவும் அதிகரித்திருப்பதாகவும், வீடுகளில் ஏசி இல்லாமல் வசிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2020-ல் கிட்டத்தட்ட 90 சதவீத அமெரிக்க குடும்பங்கள் ஏ.சி.-யை பயன்படுத்தின. அதே சமயம், அமெரிக்காவில் வீடுகளில் ஏசியை நிறுவுவதற்கு மிகவும் பொருட்செலவு ஆகிறது.

இதை தவிர ஏசியை பராமரிக்கும் செலவு, பழுதுபார்ப்பதற்கும் ஆகும் செலவு, குறைந்தபட்ச சேவைக்கட்டணங்கள், கோளாறை சரிபார்க்க வரும் மெக்கானிக்குகளின் சம்பளம், உதிரிபாகங்களின் செலவு என அனைத்தும் அங்கு பன்மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். சூரிய ஒளி மின்சாரத்திற்காக ‘சோலார் பேனல்’களை நிறுவிய ஒரு சிலர் மட்டும் ஏ.சி. வசதிக்கு ஆகும் செலவை சமாளிக்கின்றனர். தவிர ஏசி பயன்படுத்தலுக்கான மின்சார கட்டணமும் அங்கு மிக அதிகமாகிவிட்டது. ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டிற்கே மாதம் சுமார் ரூ.32,000 ஆகிறது. இது தாக்குபிடிக்க கூடிய செலவில்லை என்றாலும் ஏசி இல்லாமல் வாழ்வதும் முடியவில்லை என்பதால் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என அமெரிக்க மக்கள் குழம்புகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.