;
Athirady Tamil News

சிறுவர், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை!!

0

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார்.

நேற்று வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மகளிர் விவகார அமைச்சின் பதில் செயலாளர், அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களின் நேரடிப் பங்குபற்றுதலுடன், சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணையவழியில் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு, அந்தந்த மாவட்டங்களில் காணப்படும் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், கைத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மீதான அதீத நாட்டம், இளவயது திருமணம், சிறுவர் பராமரிப்பின்மை, சிறுவர் இல்லங்களின் குறைபாடுகள், பாடசாலை இடைவிலகல், பெற்றோரின் முறையற்ற திருமணங்கள் முதலிய பல்வேறு பிரச்சினைகள் இதன்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் முன்வைக்கப்பட்டது.

இவற்றை விபரமாகக் கேட்டறிந்த ஆளுநர், மாணவர்கள் மற்றும் இளவயதினரின் பொழுது நல்ல வழிகளில் கழிவதற்கு ஏற்ற வழிவகைகளை மேற்கொள்ள பாடசாலைகளும், பிரதேச மற்றும் கிராமிய மட்ட அமைப்புக்களும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பான வெவ்வேறு உத்தியோகத்தர்கள் அதாவது சராசரியாக ஒரு பிரதேசசெயலகத்திற்கு பதினொரு உத்தியோகத்தர்கள் என்ற அளவில் பணிபுரிகின்றார்கள். அவர்கள் குழுவாக இணைந்து செயற்படும்பொழுது இவை சம்மந்தமான பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் அவை பற்றி ஆராய முற்படாமல், பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்து நிறுத்தும் வழிவகைகள் குறித்து ஆராயவேண்டும் என்றும், இவ்வாறான பிரச்சினைகளின் மூலகாரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கு தினமும் ஒரு பாடம் ஒதுக்கப்படவேண்டும் என்றும், கிராம மட்டத்தில் விளையாட்டு, கலைச் செயற்பாடுகள் என்பவற்றில் இளையோரை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில், பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்கள், விளையாட்டுக் கழகங்கள், மகளிர் அமைப்புக்கள், கலைக்குழுக்கள் என்பனவற்றையும் இணைத்துச் செயற்பாடுகளை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

பாடசாலை அதிபர்களும் ஏனைய கல்விசார் உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களுடன் தொடர்பில் இருந்து, போதைப்பொருள் பாவனை, உளவியல் சார்ந்த பிரச்சினைகள், பாடசாலை இடைவிலகல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், இப்பிரச்சினைகள் தொடர்பான தரவுகளை தமக்குக் காலத்துக்குக் காலம் உடனடியாக அனுப்பிவைக்குமாறும் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற கலந்துரையாடல்களை அடிக்கடி நடாத்த வேண்டுமென்றும் இவை இனிவரும் காலங்களில் கிரமமாக நடாத்தி படிப்படியாக பிரச்சினைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது ஆளுநர் உறுதியளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.