;
Athirady Tamil News

மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி- சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டு!!

0

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் இப்போராட்டம் தொடர்ந்தபடி இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு தகுதி தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு நேரடியாக கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இருவருக்கும் இந்த சலுகையை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி வழங்கியது.

இதற்கு இளம் வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மற்றொரு வீராங்கனையான சாக்ஷி மாலிக் கூறியதாவது:- நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம். ஆகஸ்டு 10-ந் தேதிக்கு பிறகு தகுதியை சோதிக்குமாறு கோரியிருந்தோம். இதையடுத்து அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது.

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு, மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியாகும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற காரணத்திற்காக எனது பெயரும் பரிசீலிக்கப்படும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை. அனைவருக்கும் நீதியும் நியாயமான தேர்வுக்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை உடைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.