நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது!!
நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஐந்து கோடியைத் தாண்டியுள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்றம், 25 உயர்நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்கள் என பல்வேறு நீதிமன்றங்களில் 5.02 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவர் கூறியுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜூலை 1-ந்தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில் 69,766 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய நீதித்துறை கட்டமைப்பின் தகவலின்படி, ஜூலை 14-ந் தேதி நிலவரப்படி உயர்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை முறையே 60 லட்சத்து 62 ஆயிரத்து 953 மற்றும் 4 கோடியே 41 லட்சத்து 35 ஆயிரத்து 357 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இல்லாதது, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் உடல் கட்டமைப்பு, சம்பந்தப்பட்ட உண்மைகளின் சிக்கலான தன்மை, ஆதாரங்களின் தன்மை, பார், விசாரணை அமைப்புகள், சாட்சிகள் மற்றும் வழக்கு தாரர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகிறது. பல்வேறு வகையான வழக்குகளை தீர்ப்பதற்கு அந்தந்த நீதிமன்றங்களால் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இல்லாதது, அடிக்கடி ஒத்திவைக்கப்படுவது மற்றும் கண்காணிப்பதற்கும், விசாரணைக்கும் போதுமான ஏற்பாடுகள் இல்லாதது போன்ற காரணங்களூம் வழக்குகளை தீர்ப்பதில் தாமதத்திற்கு வழிவகுக்கின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது நீதித்துறையின் எல்லைக்குள் உள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை தீர்ப்பதில் அரசுக்கு நேரடிப் பங்கு இல்லை சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.