ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3½ மணி நேரம் நடந்த சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது!!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் சென்றன. இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 7 போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் ரகோத்தமன் விடுமுறையில் இருந்ததால், பொறுப்பில் இருந்த துணை சார்பதிவாளர் ஷகீலா பேகத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் மற்ற அலுவலர்கள், ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியை கடந்தும் நீடித்தது. சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் சிக்கியது. மேலும் சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.