செயற்கை நுண்ணறிவுதான் நிஜ உலக டெர்மினேட்டரா? இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பதில்!!
உலக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கத்தில் 1984ல் வெளிவந்து உலகெங்கிலும் வசூலை அள்ளி குவித்த திரைப்படம் “தி டெர்மினேட்டர்”. இத்திரைப்படத்தில் அதிநவீன அறிவாற்றல் மிக்க ஆயுதங்கள் மனித இனத்தையே அழிக்க முற்படுவதாக கதை அமைந்திருக்கும். அந்த படத்தில் வரும் டெர்மினேட்டர் போன்று, இப்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். ஏஐ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து உலகெங்கிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து இரு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. இது குறித்த தனது கவலைகளை ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.
அவரது திரைப்படத்தில் வருவது போன்று எதிர்காலத்தில் நிகழுமா? என கேட்டபோது அவர் கூறியதாவது: ஆம். அவ்வாறு நடக்கும் என்று நம்புபவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். 1984லேயே (திரைப்படம் மூலம்) நான் எச்சரித்திருந்தேன். நீங்கள் கேட்காமல் அலட்சியப்படுத்தினீர்கள். செயற்கை நுண்ணறிவால் விளையக்கூடிய ஆபத்துக்களிலேயே ஆயுதங்கள் உற்பத்திக்கு அவற்றை பயன்படுத்துவதில்தான் அதிக அபாயம் உள்ளது. அணு ஆயுத போர் போன்ற நிலை உருவாகலாம். ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் இதில் ஈடுபட்டு நிலைமையை மோசமடைய செய்து விடுவார்கள். மனிதர்களால் தலையிட முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கணினிகள் இயங்க தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். ஏஐ குறித்து கேமரூன் இதற்கு முன்பும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
ஏஐ ஏராளமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார். மேலும், நமக்குத் தெரியாமல், அனைத்து தகவல்களையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கணினிகள் உலகை கையாளக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த துறையில் உள்ள முன்னணி நிபுணர்களும் கேமரூனின் சிந்தனையை ஒட்டியே கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபன்ஏஐ, கூகுள் போன்ற பெரிய நிறுவன அதிபர்கள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் இணைந்து ஏஐ விளைவிக்க கூடிய அபாயங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
தொற்றுநோய்களையும் அணுசக்தி யுத்த அபாயங்களையும் ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இணையாக இதற்கும் முன்னுரிமை தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏஐ அமைப்புகளால் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும் வரை ஏஐ சார்ந்த அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பது 6-மாத காலமாவது நிறுத்தப்பட வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் வோஸ்னியாக் உட்பட 1,000க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.