யாழ்ப்பாணத்திற்கு யானைகளை கொண்டு வர அனுமதி பெறப்பட வேண்டும்!!
ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்தும் போது உரிய அனுமதிகளை பெற வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது, வேறு மாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துவதனை காணக்கூடியதாக உள்ளது.
உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதாகும். அத்துடன் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமாக ஆபத்துகளை ஏற்பட கூடும்.
அதனால் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளை பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளதுடன், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொழில் பரப்பினுள் அவற்றுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினரும் மற்றும் உற்சவங்களை நடாத்துவோரை கேட்டுக்கொள்வதாக செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.