இந்த விஷயத்தில் காந்திக்கள் மவுனம் சாதிப்பது ஏன்? மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கேள்வி!!
மணிப்பூரில் மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின்போது நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியாவில் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மணிப்பூரின் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளும் பாஜக தரப்பில் தொடர்ந்து பதில் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய வேண்டும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஒரு வருடத்தில் 22% கற்பழிப்பு சம்பவங்கள் ராஜஸ்தானில் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றமும் குற்றம்தான். எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பதை பொறுத்து கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது போன்ற குற்றங்கள் சமீபத்தில் பதிவாகியுள்ள மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தங்கள் குழுவினரை அனுப்புவீர்களா?
மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து ஒதுங்கி ஓடுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் இருந்தபோது மணிப்பூரில் 6 மாத கால வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் நாங்கள் மணிப்பூரில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். உள்துறை மந்திரி 4 நாட்கள் அங்கு இருந்தார். விவாதத்தில் இருந்து தப்பிக்க என்ன காரணம்? ஏனென்றால், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் (ராகுல் காந்தி) தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், பாராளுமன்றம் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை. முதலமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓட முடியாது. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அமைச்சர் சாந்தி தரிவாலின் கருத்து தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? மேற்கு வங்காளத்தில் நடக்கும் வன்முறையைப் பார்த்து அவர்கள் ஏன் வாயை திறக்கவில்லை? ஹவுரா மற்றும் மால்டா ஆகிய இரு பகுதிகளிலும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மம்தா பானர்ஜியின் தாய் அன்பு எங்கே போனது? இவ்வாறு அவர் கூறினார்.