;
Athirady Tamil News

உடனே வெளியேறுங்கள்.. மைதேயி சமூகத்தினரை எச்சரித்த பாம்ரா: மிசோரத்திலும் கலவர அபாயம்!!

0

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே மாதம் தொடங்கி இரு இனத்தவர்களிடயே மோதல் உருவாகி பெரும் கலவரமாக மாறியது. மே மாதம் கலவரத்தின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி (Mizoram National Front) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, அரசாங்கங்களின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையின்படி அமைதி வாழ்விற்கு திரும்பியது. இம்முன்னணியை சேர்ந்தவர்களை கொண்டது மிசோரம் மாநிலத்தின் பாம்ரா (Peace Accord MNF Returnee’s Association) சங்கம்.

இந்த அமைப்பு, மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை “மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்” என எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், இரு பெண்களை ஆடையின்றி அணிவகுத்து அழைத்து சென்ற சம்பவத்தை கேள்விப்பட்டதும் மிசோரம் இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் மிசோரத்திலுள்ள மைதேயி சமூகத்தினர் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும். மணிப்பூரில் உள்ள குகி இன சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறையால் மிசோ உணர்வுகள் ஆழமாக புண்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள மைதேயி இனத்தவர்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால், அதற்கு அவர்களே பொறுப்பு. இவ்வாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த முறையீடு மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி மக்ககளுக்கு மட்டுமே என்றும், வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து, மிசோரம் அரசு, தலைநகர் ஐசாலில் மைதேயி சமூகத்தினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. எந்த மைதேயி இனத்தை சேர்ந்தவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மிசோரம் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மைதேயி இனத்தவரின் பாதுகாப்பு குறித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா உறுதியளித்தார். மணிப்பூர் அரசு, மிசோரம் மற்றும் மத்திய அரசாங்கத்துடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. பெரும்பாலும் மணிப்பூர் மற்றும் அசாமைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மைதேயி சமூகத்தினர் மிசோரமில் வாழ்கின்றனர். மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 12000 குகி இனத்தவர்கள் மிசோரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.