பெங்களூருவில் ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் 27-ந்தேதி ‘ஸ்டிரைக்’!!
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர பஸ்கள் மட்டுமின்றி தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரி ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தனியார் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்பு மட்டுமின்றி இழப்பும் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன டாக்சியை அனுமதிப்பதால் ஆட்டோக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை. காப்பீடு செலுத்த முடியவில்லை. வாழ்க்கையை நடத்துவதே கடினமாகிவிட்டது. இதனால் 23 வெவ்வேறு வகையான தனியார் போக்குவரத்து வாகன சங்கங்கள் இணைந்து வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.