;
Athirady Tamil News

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் !! (மருத்துவம்)

0

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது.

குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளிடத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எதிர்த்துப் பேசுவது, அடம் பிடிப்பது என நடத்தை ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாக சோகம், கோபம், தனிமை போன்ற மாற்றங்கள் ஏற்படுவதும் இயற்கைதான்.

சில குழந்தைகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்போது, காலப்போக்கில் தானாகவே மறைந்துவிடும். ஆனால், சில குழந்தைகள் தொடர்ந்து தவறான நடத்தை மற்றும் உணர்ச்சி மாற்றங்களை தானாகவே வளர்த்துக் கொள்ளும்போது அது அவர்களின் ஆளுமையாகவே மாறி மனநலப் பிரச்சினையை உருவாக்கிவிடுகிறது.

அதிலும், மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் போவதால், இவ்வித உணர்ச்சி மற்றும் நடத்தை கோளாறுகள் இவர்களை புரட்டிப் போட்டுவிடுகின்றன. எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய மாட்டார்கள் என்றாலும், வயதொத்த குழந்தைகளின் நடத்தையில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டால் பெற்றோர் அதை கவனத்தில் கொள்வது மிக அவசியம்.

இதற்காகவே குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட மனநிலைக்கு மாறாக உங்கள் குழந்தையிடம் வித்தியாசமான செயல்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த அட்டவணை.

முதல் 2 மாதங்கள்
​* முதலில் தாயின் முகத்தை நேருக்குநேர் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கும்.
* அழுகை மூலம் தனக்கு வேண்டியதை கேட்டுப்பெறும். அப்படி கிடைக்கவில்லை என்றால் தன் கைகளையும், விரல்களையும் சூப்பத்தொடங்கி தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்ளும்.

4 மாதங்கள்
* குழந்தை தனக்குத்தானே சிரித்து விளையாட ஆரம்பிக்கும்.

* பெரியவர்கள் அதனோடு விளையாடுவதை நிறுத்தினால் உடனே அழ ஆரம்பிப்பார்கள்.
* உங்கள் முகத்தின் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிப்பார்கள்.

6 மாதங்கள்
* நெருக்கமானவர்களையும், அந்நியர்களையும் வேறுபடுத்தி அடையாளம் காணத் தொடங்குவார்கள்.

* புன்னகைப்பது, சிரிப்பது மற்றும் அழுவதன் மூலம் தன்னோடு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

* தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.

* அந்நியர்களைப் பார்த்தால் பயப்படுவார்கள்.

* மற்ற குழந்தைகள் வைத்திருக்கும் பொம்மைகள் மீது ஆசைப்படுவார்கள்

* தனக்கு பரிச்சயமான முகங்கள் அருகில் இல்லை யென்றால் அழத் தொடங்குவார்கள்.

2 முதல் 17 மாதங்கள்
* நெருக்கமானவர்களுடன் மட்டும் தனக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

* கையில் கிடைக்கும் பொருளை எடுத்துக் கொடுப்பது போன்று குடும்ப நபர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள்.
* தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் வித்தியாசமான ஒலிகளை எழுப்பி நம்முடைய கவனத்தை ஈர்க்க பார்ப்பார்கள்.
* பந்துகளைப் தூக்கிப்போட்டு பிடிப்பது போன்று சின்னச்சின்ன விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

1 முதல் 2 வயது
* அதிகமான கோபமும், முரட்டுத்தனமும் எட்டிப் பார்க்கும் பருவம் இது. அதிகமாக முரண்டு பிடிக்க ஆரம்பிப்பார்கள்.
* பெரியவர்களையும், மற்ற குழந்தைகளையும் பார்த்து அவர்களின் செயல்களை அப்படியே செய்யத் தொடங்குவார்கள்.

* மற்ற குழந்தைகளோடு இணைந்து விளையாட விரும்புவார்கள்.

3 முதல் 4 வயது
* தங்களது உணர்ச்சிகளை அதிகமாக வெளிக்காட்டத் தொடங்கும் வயது.
* தன்னுடன் இருப்பவர்களோடு ஒற்றுமையாக பழகத் தொடங்குவார்கள்.
* பெற்றோருடன் இருப்பதைவிட, மற்ற குழந்தைகளுடன் அதிகநேரம் இருப்பதையே விரும்புவார்கள்.

5 முதல் 6 வயது
* பாலினப் புரிதல் தொடங்கும் வயது. ஒத்த பாலின நண்பர்களிடமே அதிகம் விளையாடுவார்கள்.
* சக நண்பர்களோடு அதிகமாக பேசுவது, சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாடுவது பகிர்ந்து கொள்வது எல்லாமே இந்த வயதில்தான்.
* தங்களுக்குள் நிகழும் சங்கடங்கள், கோபம் போன்ற உணர்ச்சிகளை உணரத் தொடங்கும் வயது இது.

7 முதல் 8 வயது
* தன்னுடைய நண்பர்கள் மற்றும் தன்னுடன் விளையாடும் குழந்தைகளின் செயல்களைப்பற்றி புகார் சொல்ல ஆரம்பிப்பிப்பார்கள்.
* மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள்.
* குறிப்பிட்ட நோக்கம் இல்லாவிட்டால் நீங்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றமாட்டார்கள்.
* தங்கள் மன வருத்தத்தை வெளியே செல்லத் தெரியாமல், மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

9 முதல் 10 வயது
* சின்னதாக ஒரு நட்பு வட்டம் உருவாக்கிக்கொண்டு, தங்களுக்குள் ரகசியங்கள், நகைச்சுவைகளை பகிரத் தொடங்குவார்கள்.
* குடும்ப நடவடிக்கைகளில் இருந்து விலகத்தொடங்கி, தங்கள் சொந்த அடையாளத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
* சுயநலத்துடன், முரட்டுத்தனமாக இருந்தாலும் அன்போடும், பாசத்தோடும் பழக முயற்சி செய்வார்கள்.

11 முதல் 15 வயது வரையிலான முன் விடலைப் பருவம்
* எதையும் தர்க்கரீதியாக சிந்திக்கத் தொடங்கும் பருவம் இது. ஏன், எதற்கு என கேள்விகள் எழுப்பி விடை காண முயல்வார்கள்.
* அடிக்கடி மனசோர்வுற்று, தனிமையை விரும்புவர்.
* வீட்டிலுள்ள பெரியவர்களின் வார்த்தைகளைவிட, நெருங்கிய நண்பர்களின் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள்.
* புதுப்புது சிகையலங்காரம், ஆடையலங்காரங்களில் நாட்டம் அதிகமாகும்.

* நடை, உடை பாவனைகளில் தங்களுக் கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

16 முதல் 18 வயது வளரிளம் பருவம்
* அதிகமான சுதந்திரத்தை விரும்பும் இவர்கள் மெல்ல, மெல்ல பெற்றோரிடமிருந்து விலகத் தொடங்குவார்கள்.
* தன்னுடைய சுயவலிமை, இயலாமைகளை கண்டறிந்து, அதனால் ஏற்படும் மனக்கிளர்ச்சிகளை வெளிப்படுத்தத் துடிக்கும் பருவம் இது.
* தன் தனிப்பட்ட வெற்றிகளில் அதிகம் பெருமிதம் கொள்வார்கள்.
* நண்பர்களுடன் அடிக்கடி வெளியே தங்குவதற்கு அதிக விருப்பம் காட்டுவார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.